5 வயது பிஞ்சு குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்

0

கடந்த சில மாதங்களாக, தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கருப்பூரில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில், கடந்த இரண்டு மாதங்களில் அந்த பகுதியில் வெறி நாய் கடித்தால் ஏராளமான ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் இறந்துள்ளன. அதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே நேற்று இரவு 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த சிறுமியை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. அது மட்டுமல்ல, நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனையும் வெறி நாய்கள் கடித்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

மேலும், கருப்பூர் காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களான சதீஷ்- வினோதா தம்பதியரின் 5 வயது மகள் சஸ்மிதா நேற்று இரவு, தனது வீட்டின் வாசலருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, வெறி நாய் ஒன்று இந்தக் குழந்தையின் கழுத்து, இடுப்பு பகுதிகளில் கொடூரமாகக் கடித்துக் குதறியிருக்கிறது. இதனால் அந்தக் குழந்தை வலியாலும் பயத்தாலும் கதறி அழுதிருக்கிறது. குழந்தையை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சஸ்மிதா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தப் பகுதியிலுள்ள வெறி நாய்களை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இந்தப் பகுதி மக்கள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்தநிலையில், இன்று காலை, அரசு என்கிற 12 வயது சிறுவனை வெறி நாய் கடித்த சம்பவம் இந்தப் பகுதி மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சிறுவனின் தொடைப் பகுதியில் வெறி நாய் கடித்ததால் ஆழமான, பயங்கரமான காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, இன்று மேலும் இருவரை வெறி நாய்கள் கடித்துள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான வீர,ராஜேந்திரன் “கருப்பூர்ல, தெரு நாய்களின் தாக்குதலால் ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்துபோய்க்கிட்டு இருக்கு. இதனால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்னு, கடந்த ஜூலை 31-ம் தேதி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டேன். அந்த குரூப்பில் ஆட்சியரும் இருக்கார்.

அவரோ அல்லது மற்ற அதிகாரிகளோ உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்ப இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாங்க” என ஆதங்கப்பட்டார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நாம் இது குறித்துப் பேசியபோது “நேற்று நாய் கடித்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுல நான் சிறப்பு கவனம் செலுத்திவருகிறேன்.

கருப்பூர் பகுதியில் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, நான் ஏற்கெனவே உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்குள்ள நாய்களை அழிக்க, பிராணிகள் நல சட்டம் அனுமதிக்காது. மக்களைப் பாதுகாக்க சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை நல்ல முறையில் செய்துவருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here