45 வருட இசைப் பயணத்தில் இளையராஜா

0

தமிழ்த் திரையுலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் ஒரு சிலரே. அந்த விதத்தில் தமிழ் சினிமா இசையில் ஒரு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1976ம் ஆண்டு மே 14ம் தேதி வெளிவந்த ‘அன்னக்கிளி’ படத்தின் இசை, தமிழ் சினிமா ரசிகர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. அதற்கு முன்பு வரையிலும் அவர்கள் கேட்ட சினிமா இசைக்கும், ‘அன்னக்கிளி’ படத்தில் கேட்ட சினிமா இசைக்கும் அவ்வளவு மாற்றம் இருந்தது.

அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் இந்த மண்ணின் இசை ஒலித்தது. பாடல்களில் கிராமத்துத் தமிழ் விளையாடிது. ஒவ்வொரு ரசிகரையும் அந்தப் படத்தின் பாடல்கள் கட்டிப் போட்டது. எங்கோ ஒரு கிராமத்தில் திருவிழாவில் ஒலிக்கும் அந்தப் பாடல் காற்றில் வேறு ஒரு ஊருக்குத் தவழ்ந்து போனாலும் அங்குள்ளவர்களும் அப்பாடலைக் கேட்காமல் நகர்ந்ததில்லை.

இப்படி கடந்த 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது தனித்துவமான இசையைப் பதிவு செய்து கோடானு கோடி இசை ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இளையராஜா.

எத்தனை ஆயிரம் பாடல்கள், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பின்னணி இசை, பல பாடலாசிரியர்கள், விதவிதமான இனிமையான குரலை வெளிப்படுத்திய பாடகர்கள், பாடகிகள் என அவருடைய இந்த 45 வருடத் திரையுலகப் பயணம் சினிமா ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம்.

தற்போதும் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இன்னும் பல்லாண்டுகள் அவரது பயணத்தைத் தொடர வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here