வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கடும் அதிருப்தியில்! வெளியான முக்கிய தகவல்

0

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த பெருமளவான இலங்கையர்கள், தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

அதன் விளைவாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுவதனை அவதானிக்கமுடிகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கையிலோ அல்லது சிங்கள இனத்திலோ அல்லது விக்ரமரத்ன குடும்பத்திலோ பிறப்பதற்கான தீர்மானத்தை நான் மேற்கொள்ளவில்லை.

மாறாக அவையனைத்தும் தானாகவே நடைபெற்ற விடயங்களாகும். அதேபோன்றுதான் ஒவ்வொரு பிரஜையும் தனது பிறப்பு குறித்த தீர்மானத்தை சுயமாக மேற்கொள்வதில்லை.

எனவே ஒவ்வொருவருக்குமென சுயமரியாதையும் சமத்துவமான சூழலில் வாழ்வதற்கான உரிமையும் இருக்கின்றது. எனவே இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு பிரஜையும் ‘இது எனது நாடு’ என்று உணரக்கூடியவகையிலான அதுகுறித்துப் பெருமைகொள்ளக்கூடியவாறான நாட்டைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பெருமளவான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைதந்தார்கள். இருப்பினும் அண்மைக்காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுக்கான விஜயத்தின்போது அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டமையினை அவதானிக்கமுடிந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினர், தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

உண்மையிலேயே உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரி யார்? என்ற உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

இந்தக் கருத்தை வெளியிட்டமைக்காகக் கடந்த காலத்தில் என்னையும் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைத்து விசாரணைசெய்தார்கள். இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய நிலையிலிருக்கின்றது.

ஏனெனில் தாக்குதல்கள் இடம்பெறுவதை முன்கூட்டியே தடுத்துநிறுத்தக்கூடிய வாய்ப்பு காணப்பட்டபோதிலும், அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டும்.

இருப்பினும் இந்தப் பயங்கரவாத்தாக்குதல்களால் முன்னைய அரசாங்கத்திற்கு எந்தவொரு நன்மையும் இல்லையென்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும்.

எனவே உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடாத்தப்பட்டதா? என்பது குறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும். இருப்பினும் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here