வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி

0

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸார் குறித்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here