விநாயகர் சிலை கரைக்க சென்ற பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

0

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஷ்யாம் விக்னேஷ் (13). இவர் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் மோனிஷ் (12). இவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் சிலையைக் கரைக்க பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றனர். அங்கு விநாயகர் சிலையை கால்வாயில் போடுவதற்காக இறங்கியுள்ளனர்.

அப்போது கரையோர பாசம் வழுக்கி நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த நிலையில் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடிய போதும் 2 பேரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரையில் வெகுநேரமாகியும் மாணவர்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின் சிறுகடல் பகுதியில் மாணவர்களின் சடலங்களை மீட்டனர். இதையடுத்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளை கிருஷ்ணா கால்வாயில் கரைக்கச் சென்ற மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிறுகடல் கிராமத்தில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here