வற்றாப்பளை கண்ணகித் தாயின் வைகாசி விசாகப் பொங்கல் இன்று!

0

உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம் நிறைந்த முல்லைத்தீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் உற்சவமான வைகாசி விசாகப் பொங்கல் இன்று திங்கட்கிழமை(24) ஆகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக மிக மட்டுப்படுத்தப்பட்ட ஆலய பரிபாலன சபையின் அங்கத்தவர்களுடன் சாதாரண பூசை வழிபாடாக இவ்வருட வருடாந்தப் பொங்கல் உற்சவம் இடம்பெறுகின்றது.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உற்சவம் கடந்த-10 ஆம் திகதி அதிகாலை பாக்குத்தெண்டல் உற்சவத்துடன் ஆரம்பமானது. வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப் பொங்கல் சடங்கு பற்றிக் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உற்சவமாகும்.

முல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்தில் 10 ஆம் திகதி அதிகாலை-02 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பைப் பேணிவந்த குடியானவர்களுக்கு மரபு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்குச் சென்று பாக்குத்தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.

மேற்படி சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான(2021) வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தில் கடந்த-17 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் இவ்வருடப் பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது

இதேவேளை, வழமையாக இவ்வாலய வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் உற்சவத்தில் இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொள்கின்ற போதும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தாக்கம் காரணமாக இவ்வருடம் வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் அடியவர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here