ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனைகள்!

0

இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா விளையாடுவதால் வெளிநாடுகளில் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கம் கிடைத்து வருகிறது.

பொதுவாக, டெஸ்ட் ஆட்டங்களில் ஆசியாவுக்கு வெளியே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்க மாட்டார்கள். இதனால் பேட்டிங் வரிசைக்கு எப்போதும் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலைமையை மாற்றி வருகிறார் ரோஹித் சர்மா.

ஆசியாவுக்கு வெளியே 2011 முதல் 2020 வரை இந்தியத் தொடக்க வீரர்கள் சராசரியாக 6.4 ஓவர்கள் வரை தான் தாக்குப்பிடித்துள்ளார்கள். இந்த வருடம் ரோஹித் சர்மாவால் புதிய பலன்கள் கிடைத்து வருகின்றன.

2021-ல் இந்தியா ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் விளையாடியுள்ளது. இதில் முதல் விக்கெட் சராசரியாக 20.4 ஓவர்களுக்கு விளையாடியுள்ளது. எவ்வளவு பெரிய மாற்றம் இது. ஷுப்மன் கில், ராகுல் ஆகியோர் இக்காலக்கட்டங்களில் ரோஹித் சர்மாவுடன் முதல் விக்கெட்டுக்குக் கூட்டணி அமைத்துள்ளார்கள். 6.4 ஓவர்கள் எங்கே, 20.4 ஓவர்கள் எங்கே! இதை யார் எதிர்பார்த்திருக்க முடியும்!

2011-க்குப் பிறகு ஆசியாவுக்கு வெளியே, இந்திய அணி முதல்முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்துள்ளது. நேற்று, ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இதற்கு முன்பு 2010-ல் தான், தென் ஆப்பிரிக்காவில் சேவாக்கும் கம்பீரும் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தார்கள்.

2011-க்குப் பிறகு ஆசியாவுக்கு வெளியே இந்த வருடம் தான் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 20 ஓவர்கள் வரை விளையாடியுள்ளது. அதுவும் ஐந்து முறை. இந்தத் தொடரிலேயே இருமுறை 20 ஓவர்களைக் கடந்துவிட்டது ரோஹித் – ராகுல் கூட்டணி.

ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்கியபோது பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்தியாவில் அவர் ரன்கள் குவித்தபோது வெளிநாடுகளில் தாக்குப்பிடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்தன. ஆனால் தன்னுடைய முயற்சியால் இந்திய அணிக்கு மகத்தான தொடக்கத்தை ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் உருவாக்கித் தந்துள்ளார். அதனால்தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது. இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here