ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது கட்சியினரை தமது கூட்டணியில் இருந்து நீக்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியினருடன் கூட்டணியை அமைப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சென்றிருந்த போது அவருடன் எதிர்க்கட்சித் தலைவரும் அங்கு சென்றிருந்த வேளையில் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அவரின் கட்சியின் உறுப்பினர்களிடமே கேட்க வேண்டும். அவர்கள் எங்களின் கூட்டணியில் இல்லை. அவர்களை ஏற்கனவே நீக்கிவிட்டோம். தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணியில் ரிஷாட் பதியுதீனின் கட்சி எமது கூட்டணியில் போட்டியிட்ட போதும், அதன்பின்னரான கூட்டணியில் அவர்கள் இணைக்கப்படவில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.