ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மன்னிப்பு கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ரணில் விக்ரமசிங்வை சாடியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரணில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்குவரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி கதைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக இங்கு வரவில்லை என முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிமரசிங்க கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல.
எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். அதற்கு என்னாலும் பதில் வழங்க முயும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன். அப்படியானால் இந்த பிரச்சினையை பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும்.
இறுதியில் விஜய மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல எதிரணிகளை தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை. எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்தக்கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம்.” – என்றார் ரணில்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். கடந்த கால நிலைவரம் பற்றியே அவர் கூறவிளைந்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.