யாழ். பல்கலை இசைத்துறை மாணவர்கள் செயன்முறை பரீட்சைக்கு அழைப்பு – பெற்றோர் கவலை

0

இலங்கையில் இன்றும் ஏழாவது நாளாக ஆயிரத்தைக் கடந்தநிலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் சூழலில் யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக்கழக இசைத்துறை செயன்முறைப் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

மறு அறிவித்தல்வரையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவிப்பு விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பினையும் பொருட்படுத்தாது நாளை மருதனார்மடத்தில் உள்ள இராமநாதன் நுண்கலைத்துறையில் நடைபெறவுள்ள செயன்முறைப் பரீட்சைக்கு சமுகமளிக்குமாறு இசைத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

குறித்த பரீட்சையில் இலங்கையின் மலையகம், மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட்ட பல பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோற்றவுள்ளதாக தெரியவருகின்றது.

அதேபோல,இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையும் விரைவில் நடத்தப்படக்கூடும் என்ற நம்பிக்கையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா தலைவிரித்தாடிவருகின்ற சூழலில் இலங்கையிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் மிகத் தீவிரம் பெற்றுவருகின்றது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பிரயத்தனத்தில் சுகாதாரத் தரப்பும் அரசாங்கமும் ஈடுபட்டுவருகின்றன. மட்டக்களப்பின் விபுலானந்த இசை, நடனக்கல்லூரியும் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது கவலை தருவதாகவும் பிள்ளைகள் தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here