யாழ்ப்பாணம் முழுமையாக முடக்கப்படுமா? இராணுவ தளபதி விளக்கம்

0

யாழ்ப்பாணத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளதென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவிட் தடுப்புக்காக அந்தந்த மாவட்டச் செயலர்கள் தலைமையில் மாவட்ட கோவிட் தடுப்புச் செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைவாக கோவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரத்தில் சில பகுதிகள் 10 நாள்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிட் தாக்கத்தால் வர்த்தகர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,முடக்கப்பட்ட நாட்களுக்குள் வர்த்தகர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கவேண்டும். அதன் பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்.

பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும். சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here