மூளையை பாதிக்கும் கோபம்

0

சிலருக்கு கோபம் வரும்போது ‘ஜிவ்வுன்னு கோபம் தலைக்கு ஏறுது’ என்று சொல்லக்கேட்டு இருக்கலாம்.

உண்மையில் கோபம் தலைக்கு ஏறுவதில்லை. ரத்தம் தான் மூளைக்கு ‘ஜிவ்’ என்று ஏறுகிறது.

யாராவது நம்மை கேலி செய்தாலோ, நமது செயலை தடுத்தாலோ உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுகிறோம். அந்த கோபத்தால் மூளைக்கு அதிகப்படியான ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

நமது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்பவை தமனிகள் என்னும் நுண்ணிய ரத்தக்குழாய்கள். கழுத்து மற்றும் மூளைப்பகுதிக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பணியை கவனிக்கும் ரத்தக்குழாய்களுக்கு கரோடிட் தமனிகள் என்று பெயர். ஒருவர் கோபம் அடையும் போது அவரது கரோடிட் தமனி வழியாக அதிக ரத்தம் மூளைக்கு செல்கிறது என்பதை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும், மருத்துவ அலுவலர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வில் நல்ல உடல் நலமுள்ள 58 பேரை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவரும் 19 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு பல வகையில் மனஅழுத்தங்களை ஏற்படுத்தி கோபமூட்டினார்கள். அப்போது அவர்களது மூளையின் செயல்பாடுகளை கருவிகள் மூலம் சோதித்தனர். ரத்தம் எடுத்துச் செல்லும் தமனிகளில் எப்போது அதிக ரத்தம் பாய்கிறது என்பதை அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் பதிவு செய்தனர்.

மன அழுத்தம் மற்றும் கோபம் ஏற்படும்போது கரோட்டிட் தமனிகள் விரிவடைந்து அதிக ரத்தத்தை மூளைக்கு கொண்டு செல்கின்றன. அப்படி அதிக ரத்தம் செல்லும்போதுதான் கோபம் உச்சகட்டம் அடைந்து நமக்கு ‘சுர்’ன்னு ஏறுது என்கிறோம். இப்படி அதிகமான ரத்தம் மூளைக்கு செல்வதால் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள். பல வித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, திடீர் மரணமும் கூட.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here