மூட நம்பிக்கையினால் பலியான 10 வயது சிறுவன்: அழுகிய சடலம் காவல்துறையால் மீட்பு!

0

படல்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாய், தந்தை உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, காவல்துறையினர் நேற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சிறுவன் கடந்த 7 நாட்களாக தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுவனின், பெற்றோர் அவரை அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தியிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் சிறுவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

மேலதிக விசாரணைகளை படல்கம காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here