மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ள சின்னக் கலைவாணர் பூதவுடல்!

0

தமிழ்திரைத்துறை ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்த பிரபலமான ஒரு நகைச்சுவை கலைஞன் விவேக் தனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இன்று அதிகாலை 4.35 மணி அளவில் உலகை விட்டுப் பிரித்துள்ளார்.

சமூக கருத்துக்கள் அரசியல் முறைகேடுகள், ஊழல்கள், மூட நம்பிக்கைகள், மக்கள் தொகை பெருக்கம், பெண் சிசுக்கொலை, பெண்கல்வி, வறுமையில் வாடும் நகரவாசிகளின் வாழ்க்கை என பலவிதமான சமூகம் சார்ந்த விடயங்கள் நகைச்சுவையை தொட்டு சுழன்றதால் அவருக்கு சின்னக்கலைவாணர் என்றும் மக்களின் கலைஞன் என்றும் அடைமொழிகள் வழங்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த விவேக்கின் தீராத திரைத்துறை தாகம் தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றிய அவரை திரைத்துறை பணியாளராக மாற்றியது. புதுப்புது அர்த்தங்கள், ரன், மின்னலே, நம்மவீட்டுக் கல்யாணம், தூள் உள்ளிட்ட பல படங்களில் விவேக்கின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது.

அதிலும் “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” என்ற நகைச்சுவை வசனம் அவரை மேலும் பிரபலப்படுத்தியதோடு, தற்போதும் எல்லோராலும் பேசப்படும் ஒரு நகைச்சுவையாக இருக்கின்றது.

கால்நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தனது ஆளுமையை கோலோச்சிய விவேக் மறுபுறத்தே சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலரும் கூட. 2015 இல் தனது 13 வயது மகன் காய்ச்சலால் உயிரிழந்த புத்திர சோகம் வாட்டிய போதிலும் மக்களை சிரித்க வைத்த இந்த கலைஞனின் பணி, சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, சமகால கொரோனா விழிப்புணர்வு வரை இருந்தது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் பசுமைகாலம் என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு அதைத் தீவிரமாக செயற்படுத்தியவர். அவரது இலக்கில் இதுவரை 33,23,000 மரக்கன்றுகளைக் கடந்த நிலையில் அவரது உயிர் இருப்பு கடந்து சென்றுவிட்டது.

திரைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2009ல் பத்ம ஸ்ரீ விருதுவழங்கப்பட்டு மதிப்பளிப்பட்டிருந்தது. இதனைவிட தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை அவர் நான்கு முறைபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவரின் பூதவுடல், விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேநேரம், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு, சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் பூதடல், இன்று மாலை விருகம்பாக்கத்தில் உள்ள மின்தகன சாலையில், தகனம் செய்யப்படவுள்ளதென அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here