மன்னிப்பும் மன அமைதியும்…

0

மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்றுதான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன.

மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதுவது நல்ல சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும்போது, அதை இயல்பாகச் செய்வீர்கள். யாரிடமெல்லாம் உங்களுக்கு தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீதுதான் நிராசைகளும் ஏமாற்றங்களும் கோபங்களும் அதிகம் இருக்கும்.

குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல்தான் அதிக ஏமாற்றங்களும் இருக்கும். பெற்றோர், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கை துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல்தான் எல்லா வருத்தங்களும் இருக்கும்.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும்துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக்கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்து பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் சிறு தவறுகளும் பெரிதாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இதுதான், செய்யச்செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததை பார்க்காத மனம், செய்யாததை பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும்.

ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடம் எல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும். எனவே. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம் என்கிறார்கள், மனநல ஆலோசனை நிபுணர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here