மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் தொடருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஒருவர் மற்றும் ஆசிரியர் உட்பட்ட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.
இதேவேளை படுகாயம் அடைந்தவர்களில் ஆசிரியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் நின்றிருந்த தொடருந்து திரும்புவதற்காக பின்திசையில் பயணித்தபோதே பேருந்தை மோதியதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த பகுதிக் கடவை பாதுகாப்பற்ற கடவை என்பதால் தொடருந்து பின்திசை நோக்கிப் பயணிப்பதை பேருந்து சாரதியால் அவதானிக்கமுடியாதிருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.