மட்டக்களப்பில் யோகட், தேயிலை வாங்கினாலேயே பால்மா கிடைக்கும்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு ஆடைப்பால் மா வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் இரு பால்மா வகைகளின் தயாரிப்புகளான யோகட், தேயிலை வாங்கினால் அந்த பால்மா வகைகளை வாங்கக் கூடியதாக உள்ளது என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மாவட்டத்திலுள்ள மொத்த வியாபார நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறிய கடைகள் உட்பட மாவட்டத்திலுள்ள கடைகளில் முழு ஆடைப்பால் மா வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக அறிந்த வசதிபடைத்த தனவந்தர்கள் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட கடைகளில் முழு ஆடைப்பால் மா வகைகளை மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளனர். பால்மா விநியோகிக்கும் கம்பனிகள் பால்மா கொழும்பில் இருந்து வரவில்லை எனத் தெரிவித்து பால்மா விநியோகத்தை நிறுத்தியுள்ளன. சில நிபந்தனைகளுடன் சில பால்மாக்களை அந்தக் கம்பனிகள் விநியோகிப்பதாகத் தெரிவித்த போதும் அதனை வர்த்தகர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் பால்மா வகைகள் தங்களிடம் இல்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பால்மா வகைகள் சில கடைகளில் உள்ளன. அதனை வாங்குவதாக இருந்தால் அந்த பால் மா கம்பனியின் தயாரிப்பான தலா 40 ரூபா பெறுமதியான 4 யோகட்டுகள் 160 ரூபாவுக்கு வாங்கினால் மட்டுமே 380 ரூபா பெறுமதியான 400 கிராம் பால் மாவை வாங்க முடியும்.

அவ்வாறே பால் மா கம்பனியின் தயாரிப்பான 100 கிராம் தேயிலையை வாங்கினால் அந்த பால் மாவை வாங்க முடியும் என சில வர்த்தக நிலையங்களில் இவ்வாறு வியாபாரம் இடம்பெறுகின்றது. அதேவேளை பால் மா வகைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையால் பால் மாவை மட்டும் வாங்க கடினப்படும் மக்கள் எவ்வாறு பால்மாவை வாங்கிக் குடிக்க முடியும் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய நடவடிக்கை எடுத்து பால் மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here