கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழுபேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொணடவர்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.
தடையுத்தரவையும் மீறி பேரணி இடம்பெற்றதனால் நீதிமன்ற தடைஉத்தரவினை மீறி நீதிமன்ற தடைஉத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர்போராட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை பொலிஸாரினால் கடந்த 5.02.2021 கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ம் திகதி வரை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.
பேரணிக்கு தடை விதித்த நிலையில் பேரணியில் பங்குகொண்டு நீதிமன்றை அவமதிந்தனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
இதனை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுனா ஒபயசேகர, மாயதுன்ன கொரய ஆகியோர் மேற்படி கட்டளையை வழங்கினர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம், எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும் மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு தொலை நகல் மூலமும் கட்டளையை அனுப்பி வைக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிடப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை தடுக்க கோரி பெப்ரவரி 2ம் திகதி மாலை கல்முனை பொலிஸ் கோரியிருந்த தடையுத்தரவுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பொதுமக்களுக்கு உயிர் அல்லது சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதவாறு பேரணி செல்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுதான் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டது .
இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதங்கள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு சமர்ப்பணம் விடுத்த போது நீதிவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்டபோது மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். குறித்த வழக்கு முற்றாக இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் த.கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் ஆனந்தம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.