பைஸர் – மொடர்னா தடுப்பூசி செலுத்தியர்களுக்கு பாதிப்பா? வெளியான முக்கிய தகவல்

0

நியூசிலாந்தில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழந்தார். இது தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணம் எனக் கருதப்படுகிறது.

தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இருந்த உடல் பிரச்னைகளும் தடுப்பூசி போடப்பட்டதால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்படுவது மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய தடுப்பூசி ஒழுங்கமைப்புகள் கூறுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைப் பார்க்கும்போது அதனால் ஏற்படும் அபாயம் ஒன்றுமில்லை என்றும் அவை கூறுகின்றன.

ஃபைசர், மாடனா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளால் மிக அரிதான மையோகார்டிட்டிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுவதாக ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறுகிறது. இவை இளம் வயது ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியால்தான் மரணம் நேர்ந்தது என்பதை அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், “மையோகார்டிட்டிஸ்” எனப்படும் இதயச் தசை வீக்கமானது பெரும்பாலும் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

“நியூசிலாந்தில் கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவால் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். தடுப்பூசியின் பாதகமான எதிர்வினைகளைக் கண்காணிக்கும் அமைப்பு தடுப்பூசி போட்டப்பட்ட பிறகு இறந்த மற்றவர்களின் அறிக்கையையும் ஆய்வு செய்திருக்கிறது.

ஆனால் அவை எதுவும் தடுப்பூசியால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல.” என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது. பெண்ணின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இதுவரை பெண்ணின் பெயர், வயது உள்ளிட்ட வேறு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

பெண்ணின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு, மரண விசாரணை அதிகாரி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளார். பெண்ணின் வயது உட்பட மேலதிக விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதைத் தடுக்க உதவுதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஐரோப்பிய மருந்துகள் முகமை கேட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட 195 பேருக்கு மையோகார்டிட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 10 லட்சத்தில் 5 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.அவற்றில் பெரும்பாலானோருக்கு மிக லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
மையோகார்டிட்டிஸ் என்பது என்ன? “மையோகார்டிட்டிஸ் என்பது இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பிடுகிறோம். இதற்குப் பலவகையான காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணம் தொற்றுதான்.

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகள் காரணமாக இதயத்தில் வீக்கம் ஏற்படலாம். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இது உருவாகலாம்” என்கிறார் இதய சிகிச்சை நிபுணர் ஆர்.மோகன். இதயம் செயலிழப்பதற்கான அறிகுறிகள் அனைத்தும் இதற்கு உண்டு. இதன் பொதுவான அறிகுறி மூச்சுத் திணறல்.

இவை தவிர நெஞ்சுவலி, படப்படப்பு, அசாதாரணமான அளவிலான இதயத்துடிப்பு, கால்வீக்கம் ஆகியவை மையோகார்டிட்டிஸ் பாதிப்பின் அறிகுறிகள். சிலருக்கு காய்ச்சல் ஏற்படும்” என்கிறார் ஆர்.மோகன். “தடுப்பூசிகள் வைரஸுடனும், நோய் எதிர்ப்புத் திறனுடனும் தொடர்புடையவை. அவை நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்போது இதயத் தசை வீக்கம் வர வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அவர்.

அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்வது மட்டுமே ஒரே வழி என்று அவர் வலியுறுத்துகிறார்.
கொரோனாவுக்கும் இதய வீக்கத்துக்கும் என்ன தொடர்பு? இதய வீக்கம் என்பது வைரஸ் தொற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பதால் கொரோனா காலத்தில் கணிசமான எண்ணிக்கையில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் இதய சிகிச்சை நிபுணர் பாபு.

“கொரோனா வைரஸால் பெரும்பாலும் நுரையீரல் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. அதைத் தாண்டி பலருக்கு இதயத்திலும் தொற்று ஏற்பட்டு இதயத் தசை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வில் அறிகுறியே இல்லாமல் கொரோனா வந்து போன பலருக்கும்கூட இதயத் தசை வீக்கம் வந்து குணமாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் பாபு.

எல்லா வயதினருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” என்கிறார் அவர். இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஃபைசர் தடுப்பூசி போடுவதை நிறுத்தப் போவதில்லை என்று நியூசிலாந்து அதிகாரிகள் கூறுகின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி நியூசிலாந்தில் இதுவரை 3,465 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் அவர்களில் 26 பேர் உயிரிழந்தனர்.

தொடக்கத்தில் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்த நாடு என்ற வகையில் நியூசிலாந்து வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி விநியோகத்தில் மெதுவாகச் செயல்பட்டது. சமீபத்திய நாள்களில் தடுப்பூசி விநியோகம் வேகம் பிடித்திருக்கிறது. நியூசிலாந்தில் 30 லட்சத்துக்கும் அதிமான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. 23 சதவிகிதம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவின் டெல்டா திரிபு காரணமாக நியூசிலாந்தில் தொற்று அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. நாட்டின் மக்கள் தொகை சுமார் 5 லட்சம் பேர். 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here