பேருவளையில் சமையல்காரரால் 85 பேருக்கு பரவிய கொரோனா!

0

பேருவளையில் பூப்புனித நீராட்டு விழாவில் சமையல்காரர் ஊடாகப் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி விழாக்களை நடத்துபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பேருவளை – பாதகொட பகுதியில் உள்ள வீட்டில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி நடத்தப்படவிருந்த விழா பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

பேருவளை பயாகல – கொரகதெனிய பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் சமையல்காரருக்குக் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் மேலும் 85 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழா,பேருவளை சுகாதார அதிகாரிகளினால் நிறுத்தப்பட்டதையடுத்து, விழாவுக்காகச் சமைக்கப்பட்ட உணவுகள் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த யூலை 26 ஆம் திகதி விழாவுக்காக உணவு சமைத்த சமையல்காரருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரை 85 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே, படகொட பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழா நிகழ்வு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வீட்டில் உள்ள அனைத்து நபர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, வீட்டின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெறவிருந்த இந்த விழாவில் 200 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரத்துறையினரின் அனுமதியின்றி இது போன்ற விழாவை நடத்துபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here