கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த பத்திரிகை நிறுவனம் சார்பில் ஆஜராகியிருந்தனர். இவர்களுடைய வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுதலை செய்வாதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஈ.சரவணபவன் மற்றும் செய்தி ஆசிரியரான திலீப் அமுதன் ஆகியோரை சந்தேக நபர்களாக குறிப்பிட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. குறித் செய்தி பிரசுரமாகும் போது செய்தி ஆசிரியர் அன்றைய தினம் பணியில் இல்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த இருவரையும் சந்தேக நபர்களாக குறிப்பிட்டமை தவறு எனவும் சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியின்றியும் வழக்கினைத் தொடர முடியாது எனவும் மன்றில் தங்களின் வாதத்தினை முன்வைத்தனர்.
அத்துடன் குறித்த வழக்கினை தாக்கல் செய்த யாழ்ப்பாண பொலிஸ் அத்தியஸ்த்தகர் பிரதீப் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை (கடந்த வழக்கிலும் இவர் முன்னிலையாகவில்லை), மேலும் பத்திரிகைகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் எவையும் எழுத்துவடிவில் இல்லை போன்ற பல்வேறுவிடயங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றில் தங்களின் வாதத்தினை முன்வைத்தனர்.
இருவரின் வாதங்களை பரிசீலனை செய்த நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.