புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள்

0

இதயநோய்க்கு அடுத்து உலகில் அதிக அளவிலான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருப்பது, புற்றுநோய். இது புதிய நோய் அல்ல, ஆதிகாலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. கடுமையான கட்டி என்ற பொருள்படும் ‘கார்சினோமா’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து ‘கேன்சர்’ என்பது உருவானது.

நவீன மருத்துவம் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. அதனால் அதனை உயிர்க்கொல்லி நோய் என்று கூறமுடியாது. அதுபோல், பரவும் தன்மைகொண்டது என்ற பழைய நம்பிக்கையும் தவறானது என்று உணர்த்தப்பட்டுவிட்டது. தொடக்கத்திலே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகிவிட முடியும்.

புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சியால் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதனால் மார்பகம், கருப்பை வாய், புரோஸ்டேட், பெருங்குடல் போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்கள் பெருமளவு தடுக்கப்படும். தினமும் முக்கால் மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியே போதுமானது.

பலவகையான நிறங்களை கொண்ட பழங்களை உண்ணவேண்டும். காய்கறிகள், கீரை வகைகளையும் தவறாமல் உணவில் சேர்க்கவேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். நார்ச்சத்து கொண்ட உணவுகளில் புற்றுநோய்க்கு எதிரான சக்தி நிறைந்திருக்கிறது. எளிதாக ஜீரணமாகும் உணவுகளையும், கழிவுகளை தாமதமின்றி உடல் வெளியேற்றும் விதத்திலான உணவுகளையும் உண்பது அவசியம். மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பப்பாளி, வாழை, சப்போட்டா போன்ற நாட்டு வகை பழங்களை அதிகம் உண்ணுங்கள்.

உடல் பருமனை குறையுங்கள். கொழுப்பு உடலில் சேருவது புற்றுநோயை வரவேற்கும் விதமாக அமைந்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளால் உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வாருங்கள்.

கடுமையான வெயில் உடலைத் தாக்குவதை தவிர்க்கவேண்டும். அல்ட்ரா வயலைட் கதிர்கள் உடலில் அதிகம்படுவது சரும புற்றுநோய் உருவாக காரணமாகிவிடும். நமது நாட்டில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவு என்றாலும், உச்சி வெயில் உடலில் பாய்வதை தடுத்தாலே இந்த வகை புற்றுநோயில் இருந்து தப்பித்துவிடலாம்.

புற்றுநோய் ஒரு வகை ‘சைக்கோசோமோட்டிக்’ பாதிப்பாகும். அதாவது இந்த நோய் உருவாக உடலும், மனமும் காரணமாக இருக்கிறது. அதனால் உடலையும், மனதையும் ஒரே நிலையில் சீராக்கும் தியானத்தால் புற்றுநோயை தடுக்கமுடியும். தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதுமானது.

சுற்றுப்புற சூழல் மாசற்றதாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவைகளும் சுத்தமாக இருக்கும். போக்குவரத்து நிறைந்த இடங்கள், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பது அவ்வளவு ஏற்புடையதல்ல.

பான்மசாலாவை பயன்படுத்த வேண்டாம். புகையிலை, பாக்கு மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும் பான்மசாலா பயன்பாட்டை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். இதன் பயன்பாடு நாக்கு, கன்னம், குட்டிநாக்கு போன்றவைகளில் புற்றுநோயை உருவாக்குகிறது. பெரும்பாலும் நடுத்தர வயதினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

மது அதிகமாக அருந்தக்கூடாது. அதிகமாக மது அருந்துகிறவர்களுக்கு நுரையீரல் புற்று, தொண்டை புற்று, ஈரல் புற்று போன்றவை ஏற்படுகிறது. மதுவோடு புகையும் பிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

மாமிச உணவுகளின் அளவை குறையுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள். ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்த்த உணவுகளையும் குறைக்கவேண்டும். பாஸ்ட் புட் வகைகளையும் தவிர்த்துவிடலாம். அவ்வப்போது உங்கள் வாயை நீங்கள் பரிசோதித்து பார்க்கவேண்டும். வெளிச்சத்தில் கண்ணாடியை பயன்படுத்தி வாயை ஆராயுங்கள். வாய்க்குள் வெள்ளையான படை, சிவப்பு படை, திட்டுகள், புண்கள், பற்களின் உரசலால் ஏற்பட்ட காயங்கள், பல்லை பிடுங்கிய இடத்தில் ஆறாத காயங்கள், பூஞ்சைத் தொற்று போன்றவை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீங்களே உங்கள் வாயை நன்றாக பரிசோதியுங்கள். காரமான, சூடான உணவினை உண்ணமுடியாவிட்டாலும் அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here