பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இலங்கைத் தமிழர்கள் பரிதாபமாக பலி

0

பிரித்தானியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இலங்கைத் தமிழர்கள் கருகி உயிரிழந்துள்ளனர்.

இளம் பெண், அவரது இரு குழந்தைகள், பாட்டி ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் 4 மற்றும் ஒரு வயதுடையவர்கள்.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லீஹீத்தில் உள்ள வீடொன்றிலேயே தீ விபத்து நடந்துள்ளது.

வீட்டில் இருந்த பெண்ணின், சகோதரன் மேல் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். ஆயினும் அவரது இரு கால்களும் முறிந்துள்ளன. பெண்ணின் கணவரின் பெயர் யோகன் என்று அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சம்பவம் நடந்தபோது யோகன் பணிக்குச் சென்றிருந்தார். வீட்டிலிருந்த இளம் தாய், கணவரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து “நெருப்பு… நெருப்பு….” என்று கதறியுள்ளார். மிகவும் பீதியடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். அதன்பின்னர் கைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதும், வீட்டில் இருந்த நால்வரையும் காப்பாற்ற முடியவில்லை.

தீ விபத்து நடந்த வீட்டை சுமார் 3 மாதங்களின் முன்னர்தான் 4 லட்சத்து 25 ஆயிரம் பவுண்ஸ் கொடுத்து அவர்கள் வாங்கியிருந்தனர். விபத்தில் இறந்த பெண்ணின் தாய், இன்று இலங்கைக்குத் திரும்பவிருந்தார்.

வீட்டில் தீ விபத்து நடந்தபோது, பெண்ணின் தாய் தனது பயணத்துக்கான பொதிகளைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரழந்துள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அந்த வீட்டின் முன்பாகக் கண்ணீருடன் கூடியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here