பிரான்ஸில் இருந்து இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சிறுமி!

0

ஜனாதிபதி மாமா, தாங்கள், ‘தாத்தா’ என்ற ஸ்தானத்தை அடைந்து உங்கள் பேத்தியை தொட்டுத் தூக்கி அரவணைத்த அந்த தருணம் உங்களை மெய்சிலிர்க்க வைத்ததாக முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள், இதே போன்றதான ஒரு தருணத்திற்காகவே நானும் அப்பாவும் கடந்த 13 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றோம் என ஆயுள் தண்டனை கைதியின் மகளாக கம்ஷா சதீஸ்குமார் என்பவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவது,

பெருமதிப்பிற்குரிய ஜனாதிபதி மாமா அவர்கட்டு, என்னை உங்களது மகளாய் ஏற்றுக்கொள்வீர்கள் என்றெண்ணி, ‘மாமா’ என அன்புரிமையோடு விழித்து இன்றைய நவராத்திரி நன்நாளில் கருணைக் கோரிக்கையொன்றை எழுதுகிறேன்.

தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவியான நான், யாழ், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் சுதந்திரமாக படிப்பைக் தொடர்ந்து வந்திருந்தேன். எனினும், தற்போது, தவிர்க்கவியலாத காரணத்தினால் எனது பிறந்த மண்ணைப் பிரிந்து தாயாருடன் புலம்பெயர்ந்து வந்து, இன்று பிரான்ஸ் நாட்டில் அகதியாக வாழும் துரதிஸ்டக்காரியாக இருக்கின்றேன்.

இலங்கை கடற்படையைச் சேர்ந்த ‘விஜித நம்புவசம்’ என்பவர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போது, அவரது மகள் ‘நிராஜி’ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த மகளின் கடிதத்தை படித்த பிரபாகரன், செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக உறவினர்களை அழைத்து விஜித நம்புவகம்; என்ற அந்த கடற்படை உறுப்பினரை அவர்களிடம் கையளித்துள்ளார். அண்மையில், இந்த சம்பவத்தின் காணொளியை இணையத்தில் காண நேர்ந்தபோது, எனது வாழ்விலும் அவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தால் எவ்வாறிருக்கும் எண்றெண்ணிக்கொண்டிருந்தேன்.

அதற்கேற்ப, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் 01 அன்று நாட்டின் அரச ஊடகங்களில், ‘சிறுவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் பெற்றுக் கொடுப்பேன். எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் மிகவும் பாதுகாப்பாக மீளப்பெற்றுக்கொடுப்பதே அரராங்கத்தின் முதல் கடமையாக உள்ளது. சிறுவர்களின் உலகத்தை மிக விரைவில் மீளப்பெற்றுக்கொடுப்பதற்கே எங்களுடைய ஒட்டு மொத்த திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.’ என்று நீங்கள் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியே என்னை இந்தக் கருணைக் கோரிக்கையை எழுதத் தூண்டியது.

ஜனாதிபதி மாமா, நான் எனது அப்பாவுடன் (செ. சதீஸ்குமார்) அன்பு பாராட்டி அவர் தோளில் தாவி கொஞ்சி விளையாடிய மூன்றாவது வயதில், 2008 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பிற்கு உதவியதாக என் அப்பா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு விட்டார். அப்பா செலுத்திச் சென்ற வாகனத்திலிருந்து சிறிதளவு வெடி பதார்த்தம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதன் பெயரில், 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் அப்பாவுக்கு ஆயுள்கால சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துவிட்டது.

உயிரிழப்போ, வெடிப்புச் சம்பவமோ, வெடிப்பை ஏற்படுத்தும் நிலையோ இல்லாத ஒரு விடயத்திற்கு அப்பா ஆயுள் தண்டனை அனுபவிப்பது எமது மொத்தக் குடும்பத்தையும் வேதனையுறச் செய்துள்ளது. என் அப்பாவைப் பிரிந்து கடந்த 13 ஆண்டுகளாக நான் படுகின்ற கவலைகளையும் வேதனைகளையும் வெறும் வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. அப்பா கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தில் சாரதியாக கடமையாற்றி வந்திருந்தார்.

அப்போது நாம் வாழ்ந்திருந்த கிளிநொச்சிப் பிரதேசம் புலிகள் அமைப்பின் பூரணக்கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அக்காலத்தில் அங்கு நிலவிய போர்ச்சூழல் எவ்வாறானது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள், அந்த வகையில், அப்பா ஒரு சந்தர்ப்பச் சூழ் நிலையின் கைதியாகவே இருந்திருக்க முடியுமென்று சின்னவள் நான் நம்புகின்றேன்.

கடந்த 13 வருடங்களாக எனது தாய் நாட்டின் அரச தலைவர்களினதும் அரசியல் அதிதிகளினதும் பாதங்களைப் பணிந்து, ‘அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்துவாழ ஒரே ஒரு சந்தரப்பமளித்து உதவுங்கள்’ என பல வேண்டுகை விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றேன். எனினும், சிறுமி எனது எதிர்பார்ப்பு இதுவரை ஈடேறவில்லை.

அப்பா ஆயுள் கைதியாக்கப்பட்டது, நான் அப்பாவினுடைய அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்குவது, அம்மா இன்றுவரை தனியாக இருந்து துன்பங்களை அனுபவிப்பது, கூடி விளையாட எனக்கொரு சகோதரம் இல்லாமல் போனது, நாம் அன்னிய தேசத்திற்கு புலம்பெயர்ந்து அகதியானது என அத்தனையும் யுத்தம் என்ற அரக்கனால் நிகழ்ந்தவைகள் அல்லவா. அந்தக் கொடிய யுத்தம் முடிவுறுத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் எமது குடும்பம் இன்று வரை போர்க்கால வேதனைகளுடனேயே வாழ விதிக்கப்பட்டுள்ளது.

நீங்கள், எனது அப்பாவைப் போன்றவர்களுக்கு, ‘மன்னிப்பளிக்கக் தயங்கப்போவதில்லை’ என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்ததை அறிந்ததும் ஆனந்தமடைந்தேன். உங்கள் வாக்குப் பழித்து எனது அப்பா விடுதலையாகி மீண்டும் எனக்கருகில் கிடைப்பாராயின், நானும் அம்மாவும் எமது தாய் தேசம் திரும்பி சுதந்திர இலங்கையர் என்கின்ற பெருமிதத்துடன் அப்பாவோடு சேர்ந்து வாழும் அதிஸ்டம் பெற்றவர்களாக இருப்போம்.

ஜனாதிபதி மாமா, தந்தை அந்தஸ்தை தாண்டிய தாங்கள், ‘தாத்தா’ என்ற ஸ்தானத்தை அடைந்து உங்கள் பேத்தியை தொட்டுத் தூக்கி அரவணைத்த அந்த தருணம் உங்களை மெய்சிலிர்க்க வைத்ததாக முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி. இதே போன்றதான ஒரு தருணத்திற்காகவே நானும் அப்பாவும் கடந்த 13 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றோம்.

என்னுடைய மாங்கல்யப் பருவத்திற்கு முன்னர் அப்பாவின் மடியிலிருந்து அவரது சவர முகத்தை வருடி சந்தோசிக்கும் பாக்கியத்தை தங்களால் பெற்றுத்தர முடிந்தால், இந்த மகளுக்கு அதுவே போதும் எனது இந்த கருணை வேண்டுகை நிச்சயமாக உங்களது ‘அனைத்திற்கும் முன் குழந்தைகள்’ என்ற எண்ணக் கருவிலான சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டக் கவனத்திற்கு உட்பட வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கின்றேன் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here