பிரதமர் மஹிந்தவின அதிரடி திட்டம்!

0

நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை, இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (14) இடம்பெற்ற முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகளை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை செயற்படுத்தும் 6 இலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில், குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 32,000 வீடுகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.

கொலன்னாவ, டொரின்டன், புளுமெண்டல், பேலியகொட, ஒருகொடவத்த முதலான பகுதிகளிலும், கண்டி, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் புதிதாக செயற்படுத்தப்படும் நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்பு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறைந்த வருமானம் பெறுவோருக்காக மஹரகம, நுகேகொட மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் புதிதாக வீடமைப்பு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், கோட்டை வீடமைப்பு திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து மேலும் 12,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போதுள்ள நடைபாதைகளுக்கு மேலதிகமாக 25 மாவட்டங்களில் புதிதாக மேலும் 28 நடைபாதைகள் நிர்மாணிக்கப்படும்.

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை நடுத்தர வருமானம் பெறுவோருக்காக 4,000 வீடுகளை நிர்மாணித்து வருவதுடன், அத்திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here