பயம் நிறைந்த வாழ்க்கை.. பரிதவிக்கும் குடும்பங்கள்…

0

பயம் நிறைந்த வாழ்க்கை மக்களுக்கு பழக்கமாகிக்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பயம் கொள்கிறார்கள். கண்டதையும் நினைத்து காரணமில்லாமல் கவலைப்படுகிறார்கள். சாதாரண பிரச்சினைகளைகூட எதிர்கொள்ள முடியாமல் அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க ஓடுகிறார்கள். இதனால் உருவாகும் பதற்றமும், பரபரப்பும் அவர்களது மனநிலையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, மன அழுத்தத்தை தோற்றுவிக்கிறது. அது அவர்களது அன்றாட வாழ்க்கையில் சிக்கலையும், பணியில் பாதிப்பையும், உறவில் நெருக்கடியையும் உருவாக்குகிறது. அத்தகைய பயம் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள்.

இன்று மக்கள் எது எதற்கோ பயப்படுகிறார்கள். பயணம் செய்ய பயப்படுகிறார்கள். பணத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல பயப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தையை யாரேனும் கடத்திச் சென்று விடுவார்களோ என்ற பயமும், கல்லூரிக்குச் செல்லும் மகள் யாரையேனும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்வாளோ என்றும் பயப்படுகிறார்கள். குடும்பத்தில் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும், முன்பு எங்கோ, யாருக்கோ நடந்த எதிர்மறையான சம்பவத்தோடு முடிச்சுப்போட்டு சிந்தித்து, ‘அதுபோல் தன் வீட்டிலும் நடந்துவிடுமோ!’ என்று காரணமில்லாமல் கவலை கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் பயம் ஏற்படுவதற்கு மூளையில் பதிவாகியிருக்கும் எதிர்மறையான சம்பவங்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. நாம் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி எப்போதும் ஏராளமான செய்திகளை பார்க்கவும், கேட்கவும் செய்கிறோம். பொதுவாக எதிர்மறையான செய்திகள் மீதுதான் எப்போதும் நம் கவனம் அதிகம் பதியும். ‘நமக்கும் அப்படி நடந்துவிடக்கூடாதே’, என்ற எண்ணத்திலும் ‘நாம் அந்த சம்பவத்தில் இருந்து விழிப்புணர்வு பெற முடியும்’ என்ற நோக்கத்திலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்த எதிர்மறை சம்பவத்தை அப்படியே மனதில் பதியவைத்துவிடுகிறோம். பின்பு அந்த சம்பவத்தை நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களிடம் கூறி, ‘இப்படி எல்லாம் நடக்கிறது. நாம் கவனமாக இருந்துக்கணும்’ என்றும் சொல்வோம்.

‘ஒரு எதிர்மறை செய்தியை பார்த்தாலோ, படித்தாலோ அதில் இருக்கும் தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை அப்படியே மறந்துவிடவேண்டும்’ என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, அந்த எதிர்மறை செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டால், அது அப்படியே நமது மூளையில் பதிவாகிவிடும். அப்படி பதிய இடம்கொடுத்துவிட்டால், நமது குடும்பத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும் உடனே அந்த சம்பவம் நினைவுக்கு வந்து ‘அதுபோல் ஆகிவிடுமோ!’ என்ற கருத்தை பரப்பி பயத்தை உருவாக்கிவிடும். அந்த பயத்தால் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகும். விபரீதங்கள் கூட நடந்துவிடும். அப்படிப்பட்ட தேவையற்ற பயம்தான் இப்போது சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மாதிரியான தேவையற்ற பயம் உங்களை வாட்டாமல் இருக்கவேண்டும் என்றால், எதிர்மறையான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அத்தகைய சம்பவங்களை கேட்பது, பார்ப்பது, பேசுவது, விவாதிப்பது போன்றவைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் பாசிட்டிவ்வான செய்திகளை பற்றி திரும்பத் திரும்ப பேசி, விவாதித்து அவைகளை மூளையில் பதியவிட வேண்டும். இந்த இரண்டும் சரியாக நடைபெறவேண்டும் என்றால் முதலில் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கமும், நம்பிக்கையும் கொண்டிருக்கவேண்டும். மனோசக்தியை மேம்படுத்தவேண்டும். அதற்கு தியானம் நன்றாக கைகொடுக்கும். கூடவே குடும்ப உறவுகளை சீர்படுத்தி சிறப்பாக வாழவும் வேண்டும்.

இன்று இயந்திரமயமான வாழ்க்கையைதான் எல்லோரும் வாழ்கிறார்கள். படிப்பு, வேலை, பணம் சம்பாதித்தல், வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளுதல் என்று வேகவேகமாக ஓடுகிறார்கள். அவர்கள், ஐம்பது வயதை தொடும்போதுதான், ‘வாழ்க்கையின் வெற்றி அவைகளில் இல்லை.. மகிழ்ச்சி என்பதில் இருக்கிறது’ என்பதை கண்டறிகிறார்கள். ‘மகிழ்ச்சி என்பதை பதவியாலோ, பணத்தாலோ, செல்வாக்காலோ பெற முடியாது’ என்ற உண்மையும் அப்போதுதான் அவர்களுக்கு புரிகிறது.

அப்படியானால் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது? எது மகிழ்ச்சி? ரொம்ப சிம்பிள். இரவில் படுத்து நன்றாக தூங்க முடிந்தால் அது மகிழ்ச்சி. மறுநாள் காலையில் விழித்து சூரியனை பார்க்க முடிந்தால் அது மகிழ்ச்சி. பசிக்கு ருசியாக சாப்பிட முடிந்தால் அது மகிழ்ச்சி. ஆரோக்கியமாக வாழ்ந்தால் அது மகிழ்ச்சி. அதற்கு மேல் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா கஷ்டங்களையும், அனுபவங்களாக எடுத்துக்கொள்ளத் தெரிந்தால் அதுவும் மகிழ்ச்சிதான்.

ஒருவருக்கு வியாபாரத்தில் திடீரென்று ஒருகோடி ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது. அதை அறிந்த மனைவி கவலையோடு கணவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவரோ சிரித்தபடி வீட்டிற்கு வந்தார். ‘ஏன் சிரித்துக்கொண்டே வருகிறீர்கள்?’ என்று மனைவி காரணம் கேட்டார். அதற்கு அவர் ‘நான் ஒருகோடி ரூபாய் செலவு செய்து உயர்ந்த பாடம் ஒன்றை படித்து வந்திருக்கிறேன். அது இனிமேல் என்னை தோல்வியடைய விடாது. காலம் முழுக்க நான் லாபம் சம்பாதிக்கவும் உதவும்’ என்றார். இப்படி தோல்வியை பாடமாகவும், அனுபவமாகவும் எடுத்துக்கொள்ள முடிந்தால் அது மகிழ்ச்சி!

தம்பதிகள் அனைவருமே குடும்ப உறவுகளை சீராக வைத்துக்கொள்ளவேண்டும். மனம்விட்டுப்பேசி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பவேண்டும். ஒழுக்கமாக வாழ வேண்டும். இவை எல்லாம் இருந்தால் கவலை இருக்காது. நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தால் பயம் இருக்காது. வாழ்க்கை இனிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here