பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொவிட் தடுப்பு நடைமுறைகள் வருத்தமளிப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தில் கடமையாற்றும் ஆறு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சங்கம் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுக்கு இப்பிரச்சினையை அறிவுறுத்தியும், அவை புறக்கணிக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் விமான நிலையத்தில் முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றாத இலங்கையர்களை அவதானிக்கூடியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு தங்கும் விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஏனைய தொழிற்சங்கங்களின் செல்வாக்கு காரணமாக விடுதிகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் இந்நிலை தொடர்ந்தால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இருந்து விலகுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.