நாட்டின் நிலைமை மிகமோசமான பொருளாதார வீழ்ச்சிக்குச் சென்றுள்ளது! சி.வி. விக்னேஸ்வரன்

0

நாட்டின் நிலைமை மிகமோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு சென்றுள்ளது. எனவே, இந்த நிச்சயமற்ற காலத்தை நாம் எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனின் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னர் கைத்தொழில்களை நிறுத்தி விட்டு விவசாயத்தைத்தான் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நேரத்தில், அவர்கள் அசேதன உரத்தைக் கொண்டு வரக்கூடாது என்று சொன்னமையின் காரணம் அரசாங்கத்திடம் நிதி இல்லை. அதாவது அந்நியச் செலாவணி இல்லை.

நாட்டில் அசேதன உரத்தின் மூலம் புதுமையான யுகத்தைக் கொண்டு வரப் போகின்றோம் என்பதெல்லாம், முற்றிலும் தவறானது. உண்மையில் அவர்களுக்கு உரத்தைக் கொண்டு வர முடியாமல் உள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமே முற்றுமுழுதாகப் பதில் சொல்ல வேண்டும்.

மக்களுக்கு வருமானம் இல்லை, பொருட்களின் விலை கூடுகின்றது. மக்கள் வக்குரோத்து நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் நிலைமை மிகமோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு சென்றுள்ளது. இதனால்தான் நான் முதலே கூறியிருந்தேன் மக்களை வீட்டுத்தோட்டங்களை செய்யுங்கள் என்று, வெளிநாட்டு செலாவணி இல்லாத நிலையில் பொருட்கள் விலையேறும், விவசாய வருமானம் அனைத்தும் வீழ்ச்சியடையும்.

ஆகவே, இந்த நிச்சயமற்ற காலத்தை தான் நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளோம்.

இந்திய மீனவர்களுடைய பிரச்சினை தொடர்பில் நான் முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் இருந்து வந்த பிரதி செயலாளர் ஒருவருடன் பேசினேன்.

அதாவது, வடமாகாணத்தைச் சுற்றியிருக்கும் கடலிலே இழுவைப் படகுகளை பாவிக்காது அவற்றை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்ல தீர்மானித்திருந்தோம்.

அதேநேரத்தில், தற்போது இருக்கும் இழுவைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல கூடிய நிலையில் இல்லை என்று இந்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

ஆகவே, இந்திய அரசாங்கம் எங்களுக்கு உரிய தொகைகளை வழங்கி அவற்றை தயாரிக்க வழிநடத்தக் கூறியிருந்தார்கள்.

ஏங்களிடம் அந்தளவுக்கு பணம் இல்லாத காரணத்தால், மத்திய அரசாங்கத்திடம் கூறியிருந்தோம். எனினும், மத்திய அரசாங்கம் இதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

ஆனால், இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அவர்கள் அதனை ஒரு சட்டமாகக் கொண்டு வராமல், இரு தரப்பிடமும் பேசி ஒரு முடிவு எடுக்காததால் இவர்கள் மறுபடியும் யாழ்ப்பாணத்திற்கு அண்டிய வளைகுடாவில் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆகவே, இவர்கள் இதனைத் தொடர்ந்து செய்தால் கடலில் இருக்கும் வளங்கள் அழிந்துபோகும். இருதரப்பு அரசாங்கமும் பேசி ஒரு நடவடிக்கையை எடுக்காவிட்டால் இது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here