நாடு மீண்டும் முடக்கப்படலாம் – ஜனாதிபதி

0

நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று(10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இருப்பினும் போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என்றும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்து வருடகால ஆட்சியின்போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே, அவர்களுக்குப் பதிலாகத் தம்மை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர் என்றும் இருப்பினும் முன்னதாக அதிகாரத்தில் இருந்திருக்காதவர்கள் போல் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுவது கவலையளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளதென்றும் தற்கால உலகின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய தொழில்நுட்ப அறிவின்றி தமது எதிர்காலச் சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்காலச் சந்ததியினருக்காக, கல்வியில் உடனடியாக மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here