இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கட்டாயம் தமக்கு டொலரில் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இன்றைய தினத்திற்கு (17) பின்னர் வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடங்கியிருந்தது.
இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், 18ம் திகதி வரை தேவையான 3000 மெற்றிக் தொன் டீசலை வலுசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபைக்கு விநியோகித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை மின்சார சபை, வலுசக்தி அமைச்சுக்கு பாரியளவு நிதி வழங்கப்படவுள்ளமையினால், இனிவரும் காலங்களில் டொலரில் கொடுப்பனவுகள் செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், தாம் ஐ.ஓ.சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கிகள் எதிர்வரும் 22ம் திகதி வழமைக்கு திரும்பும் என அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை வெளியிட்டார்.
அதன் பின்னர், மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கான இயலுமை காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.