வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய தனிமைப்படுத்தும் நாட்களை 7 நாட்களாக குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் கூடவுள்ள கொவிட்-19 தொடர்பான தொழிநுட்ப குழுவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் விருந்தகங்கள் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, சிறிது நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கான வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
அவர்கள் நாட்டுக்கு திரும்பியதன் பின்னர் உடனடியாக தமது வீடுகளில் 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.