நாடு திரும்பும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் சூடுபிடிக்கும் அரசியற்களம்

0

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஓகஸ்ட் 24ம் திகதி கொழும்பு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சி காரணமாக மாலத்தீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும் எதிர்ப்பு வெளிப்பட்டதால் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். மேலும் சிங்கப்பூரில் விசா காலம் முடிவடைய அங்கிருந்து சென்று தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இவ்வாறிருக்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக தங்க மட்டுமே கோட்டாபயவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் நிரந்தரமாக தங்க முடியாது என்றும் தாய்லாந்து அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தாய்லாந்திலும் பலத்த எதிர்ப்பு வெளிப்பட்ட காரணத்தால் தாய்லாந்தில் அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு கருதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே எதிர்வரும் ஓகஸ்ட் 24ம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என்று அவரின் நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதை உறுதி செய்யும் வகையில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டபோது “கோட்டாபய நாடு திரும்புவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவே கோட்டாபயவை நாடு திரும்ப இது சரியான தருணம் இல்லை என்று கூறி தாய்லாந்து அனுப்பி வைத்ததாகவும் தற்பொழுது அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

அமெரிக்காவில் குடியேற முயற்சி கடந்த 2003ம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்ற கோட்டாபய 2019ல் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார்.

இதன் காரணமாக அமெரிக்க செல்வதிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே குறித்த கட்டளை வழங்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகை தொடர்பில் அவரது செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் ஊடங்கள் வினவிய போது, ​​இன்னும் சில தினங்களில் கோட்டாபய ராஜபக்ச இலங்கை வரவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் இதனை தனக்கு தெரியப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here