தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

0

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின்போது, தொல்பொருள் அகழ்வுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் அகழ்வானது, எந்தவொரு சமயத்திற்கோ அல்லது மதத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளாமல், ஏன் வடக்கில் மாத்திரம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் உலகில் இந்த நாட்டைப் போல, தொல்பொருள் சிறப்புமிக்க வேறு ஒரு நாடு எங்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எம் அனைவரினுடைய உரிமையாகும் என தெரிவித்த விதுர விக்ரமநாயக்க, எனவே, இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்றுதலுடன், கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்று தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்தால், எவ்வாறான முடிவை எடுக்கலாம் என்பதை ஆராயலாம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here