தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு இன்று கொடியேற்றம்

0

நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமை காரணமாக தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, வலி.வடக்குப் பிரதேச செயலர், வலி.வடக்குப் பிரதேச சபையின் தலைவர், அரச அதிபர் ஆகியோர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சமூகப் பொறுப்புடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உள்வீதியில் மாத்திரம் இந்த வருட தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்வீதியில் அடியவர்களுக்கு அனுமதி இல்லை. எனவே, அடியவர்கள் இதனை ஏற்றுப் பொறுத்தருளி மஹோற்சவம் தடங்கலின்றி நடந்தேறப் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் மேற்படி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஶ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(10-08-2021) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவுபெறும்.

திருவிழா யாவும் உள்வீதியில் மாத்திரம் நடைபெறும். சிவாச்சாரியார்கள், உபயகாரர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர். உள் வீதியில் மட்டும் சுவாமி வீதிவலம் வருதல் இடம்பெறும். காவடி,நேர்த்திகள்,வீதிப் பிரதிட்டை என்பன தவிர்க்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. ஆலய வெளிவீதியில் நின்று தரிசிக்க வரும் அடியவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிச் சுகாதார நடைமுறைகளுக்கமையச் செயற்படவும்.

இயன்றவரை வயோதிபர்கள், சிறார்கள் தத்தமது வீடுகளிலிருந்து மஹோற்சவ கால நினைப்புடன் பிரார்த்தனை செய்யுங்கள். இயன்றவரை அமைதியான முறையில் அம்பாளின் மஹோற்சவம் நிகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வெளிவீதியில் 100 அடியவர்களுக்கு மேல் நிற்கக் கூடாது எனச் சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆலய வாசலில் வைக்கப்பட்டுள்ள சவர்க்காரம் போன்றவற்றினால் கைகளைக் கழுவி முகக் கவசம் அணிந்தவாறு வழிபாடுகளை மேற்கொண்டு விட்டு வீணான தாமதமின்றி அடியவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ சமூகம் தற்போதைய சூழலில் பல்வேறு எச்சரிக்கைகளைச் சமூகத்திற்குத் தந்து கொண்டிருக்கின்ற வேளையில் நாமும் அதற்கு மதிப்புக் கொடுத்து ஒழுங்கான முறையில் எங்கள் சமய வழிபாடுகளை நடாத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அடியவர்கள் இதனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் துர்க்கை அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தை உள்வீதியில் நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. எனவே, சிறியேனின் மன்னிப்பை ஏற்று அனைவரும் உங்களின் உயர்ந்த பக்தியை மிகவும் பக்குவமாக வெளிப்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here