திரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று

0

இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி பிறந்தார். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு செல்வது இவருடைய பாணி. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்ததே மணிரத்னம் தான்.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய ‘பல்லவி அனுபல்லவி’ படத்தினை இயக்கினார். நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ முதல் ‘தளபதி’ வரை இளையராஜா இசையிலும், ‘ரோஜா’ முதல் இன்றுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளியாகியுள்ளன.

இன்றளவும் தமிழ் திரையுலகில் கோளோச்சி வருகிறார் மணிரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’, இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். மணிரத்னத்தின் 65-வது பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், மறுபுறம் பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் கேட்டு அதனையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here