திருநெல்வேலி பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மக்களுக்கும் எச்சரிக்கை!

0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக, யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரான இதுவரையான காலத்தில் ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 639 பேர் குணமடைந்துள்ளதுடன் 17 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் தற்போது ஆயிரத்து 547 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 417 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ். மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய சுகாதார வழிகாட்டல்களையும், சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here