திருகோணமலையில் மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு

0

திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர்.

இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இம்மாதம் 15 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அன்று அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில் இவர்களை வெளியே விட்டால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் இவர்களுக்காக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார். இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார். இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here