திருகோணமலையில், ஆலயத்தின் சுவரில் திடீரெனத் தோன்றிக் காட்சிதரும் அம்மன் முகத்தினை ஒத்த உருவம்..!

0

கொவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து தம்மை காப்பாற்ற வேண்டி உலகமெங்கிலும் மக்கள் தத்தமது கடவுளர்களை மிகுந்த பயபக்தியுடன் வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், திருகோணமலை, திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் கிழக்கில் உள்ள கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில், அம்மன்நகர் கிராமத்திலுள்ள அருள்மிகு அம்மச்சியம்மன் ஆலயத்தின் உட் சுவரில் அம்மன் முகத்தை ஒத்த உருவம் தோன்றியிருப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று ஆலயத்திற்கு அம்மனை வழிபடுவதற்காக தனது மகனுடன் சென்ற பெண்மணி ஒருவர் அம்மனின் முன் கற்பூரம் ஏற்றி கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டு சில நிமிடங்களில் கண்களைத் திறந்தபோது புராதன அம்மச்சியம்மன் விக்கிரகத்தின் பின்புறச் சுவரில் பிரமாண்டமான அம்மன் முகம் தென்பட்டதாகவும், மாலைநேரமாகிவிட்டதாலும், அதை தனது மகன் கண்ணுற்று அச்சமடைந்த காரணத்தினாலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு விரைவாக வீடுவந்துவிட்டதாகவும், பின்னர் தனது தாய் தந்தையரிடமும், ஆலய பூசகரிடமும் இதுபற்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

இச்செய்தியை அறிந்த சிலர் மறுநாள் ஆலயத்துக்குச் சென்று அந்த உருவத்தை கண்டுள்ளனர். கொவிட் சுகாதார பயணக் கட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு மக்கள் இன்றும் தனித்தனியாகச் சென்று அந்த முக உருவத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.

ஒவ்வோரு ஆண்டும் குறித்த ஆலயத்தில் வைகாசி மாதம் பரிகலவேள்வி செய்வது வழங்கமாக இருந்தபோதிலும் இவ்வாண்டு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவ்வேள்வி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இவ்வுருவம் தென்படுவதானது கிராம மக்களை அச்சம் நிறைந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிராமிய வழிபாட்டில் அதீதமான நம்பிக்கை கொண்ட இங்குள்ள மக்கள் அம்மனின் முகத்தை ஒத்த இவ்வுருவம் தென்பட்டிருப்பதை மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் நோக்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here