திங்கட்கிழமை சோர்வும்.. தீர்வும்..

0

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை உற்சாகமாக கழித்துவிட்டு தங்கள் வழக்கமான வேலைகளை திங்கட்கிழமை மீண்டும் தொடங்குவதற்கு பலரும் சோம்பேறித்தனம் கொள்வதுண்டு. அப்படிப்பட்டவர்களை திங்கட்கிழமை காலையில் எழும்போதே ஒருவித சோர்வு ஆட்கொண்டுவிடும். பள்ளிக்குழந்தைகளைத்தான் இந்த சோர்வு அதிகம் பாதிக்கும். திங்கட்கிழமை சோர்வை தவிர்க்கவும், வாரத்தின் முதல் நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகள்:

அன்று, குழந்தைகளுக்கு பிடித்தமான காலை உணவை தயார் செய்து கொடுக்க வேண்டும். அது அவர்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதற்கு தூண்டும். அந்த உணவு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு முழுமையான உற்சாகம் கிடைக்கும்.

அலுவலகத்திற்கு செல்பவர்கள், அணிந்திருக்கும் ஆடை மூலம் சோம்பலை விரட்ட முயற்சிக்க வேண்டும். பொலிவில்லாத, அயர்ன் செய்யப்படாத ஆடைகளை அணிந்து கொண்டு அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும். பிடித்தமான ஆடை, காலணிகளை அணிந்து கொள்வதுடன் நேர்த்தியாக அலங்காரமும் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அணியும் ஆடையும், அலங்காரமும்தான் உற்சாகமாக செயல்பட தூண்டும்.

அலுவலகத்தை பற்றி சிந்திக்கும்போது சலிப்பு உண்டானால், திங்கட்கிழமை வேலைக்கு செல்வது சிரமமாகவே இருக்கும். அதனால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அலுவலகத்திற்கு சென்றதும் முதலில் என்ன வேலை செய்யப்போகிறோம்? என்பதை பற்றி சிந்தித்து அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய ஆயத்தமாக வேண்டும்.

அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பேண வேண்டும். அத்தகைய நட்புறவும் வேலைச் சூழலை சிறப்பாக மாற்றும். எப்போதும் ‘நான் என் வேலையை விரும்பி, ரசித்து செய்கிறேன்’ என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை நேசித்து செய்ய வேண்டும். அதன் மீது முழு ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு வேலையை விரும்பி செய்கிறீர்களோ? அந்த அளவுக்கு பார்க்கும் வேலை மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தரும். மற்றவர்கள் பாராட்டும்படி வெற்றியையும் தேடித்தரும்.

அலங்காரமும், தூய்மையும், அழகும் கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும். உற்சாகமாக வேலை செய்யவும் தூண்டும். அதற்காக நீங்கள் அமர்ந்து வேலை பார்க்கும் மேஜையை அலங்கரிக்கலாம். தேவையற்ற பொருட்கள் மேஜையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கக்கூடாது. அது சலிப்பை ஏற்படுத்தும். கண்களை சோர்வாக்கும். மனதை மகிழ்விக்கும் சிறிய அலங்கார பொருளையோ, சிறிய அலங்கார செடிகளையோ வைக்கலாம். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் சோர்வு எட்டிப்பார்க்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here