தமிழ் திரை உலகில் எந்தவித பின்னணியும் இல்லாமல் உயர்ந்த இடத்தை பெற்றவர்கள் மிகவும் குறைவு என்பதும் அவர்களில் ஒருவர் தல அஜித் என்பதும் பெருமைக்குரிய ஒன்று. தனது கடின உழைப்பால் முன்னேறி, பல சவால்களை சந்தித்து, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தல அஜித் அவர்களுக்கு இன்று 50வது பிறந்தநாளை அடுத்து அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன் பின் விளம்பரப் படங்கள் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த தல அஜித் ’அமரகாவியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு 1995ல் வெளியான ’ஆசை’ படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக ரொமான்ஸ் படங்களிலேயே நடித்து வந்த, அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்றே கூறலாம். ஏ.ஆர்.முருகதாஸின் ‘தீனா’ படத்தில் அவர் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார் என்பதும், அந்த படத்திற்கு பின்னர் தான் அவருக்கு ‘தல’ என்ற பட்டம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் சினிமாவில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் ரேஸ், கார் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர் பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபார்முலா ஒன் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமையல் கலை, துப்பாக்கி சுடுதல் போட்டி, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு வழிகாட்டி என இன்னும் எத்தனையோ அவதாரம் எடுத்துள்ளார் அஜித்.
அஜித் ஒரு இயக்குனர்களின் நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. பெரிய இயக்குனராக இருந்தாலும் சரி, அறிமுக இயக்குனராக இருந்தாலும் சரி, இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நடிக்கும் மாஸ் நடிகர்களை காண்பது மிகவும் அரிது. தனக்கென பில்டப் காட்சிகள் வேண்டும் என்றும், திரைக்கதை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிடும் மாஸ் நடிகர்கள் மத்தியில் எந்தவித தலையீடும் இல்லாமல் இயக்குனர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு நடிப்பதால் தான் அவரை தமிழ் திரையுலகம் இயக்குனர்களின் நடிகர் என்று கூறி வருகிறது.
அஜித்தின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் எந்தவித புரமோஷன் நிகழ்ச்சிகளில் தோன்ற மாட்டார் என்றும் எந்தவித விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அஜித் இந்த விஷயத்தில் ஒரு தனிக் கொள்கையை கொண்டுள்ளவர். ஒரு நடிகர் என்பவர் திரையில் மட்டுமே தோன்ற வேண்டும் என்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தேவையில்லாதது என்ற கொள்கையுடையவர் அஜித். அதனால் தான் தன்னுடைய பழைய படங்களின் புரமோஷன் மட்டுமின்றி சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவையும் அவர் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜித் தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சத்தமில்லாமல் செய்யும் உதவியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒரு சில சிறிய தொகையை கொடுத்துவிட்டு பெரிதாக விளம்பரம் செய்பவர் மத்தியில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உதவி செய்தால் கூட அதை எந்த விதமான விளம்பரமும் அவர் செய்து கொள்வதில்லை. உதவி பெற்றவர்களே கூறினால் தான் உண்டு அஜித் உதவி செய்த விஷயம் வெளியே தெரியும்.
அதேபோல் அஜித்திடம் இருக்கும் மற்றொரு நல்ல குணம், தனக்கு நிகராக இருப்பவர்களாக இருந்தாலும் சரி தனக்கு கீழே பணிபுரிவோர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் சமமாக மதிக்கும் பழக்கம் உடையவர். அதனால் தான் அவரது நடிப்பை விமர்சனம் செய்பவர்கள் கூட அவரது தனிப்பட்ட கேரக்டரை இதுவரை விமர்சனம் செய்தவர்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவையான அஜித் இன்னும் பல ஆண்டுகள் தனது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.