தமிழ்த் திரையுலகில் அஜித்தின் 28 ஆண்டுகள்

0

தமிழ்த் திரையுலகில் தற்போது பரபரப்பாக உள்ள ஹீரோக்களில் முக்கியமானவர் அஜித். அவருக்கும், விஜய்க்கும் இடையேதான் இப்போது பலத்த போட்டி என்பது சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த அளவிற்கு இருவரது ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வார்கள். இருவரது ரசிகர்களும் தரக்குறைவான விமர்சனங்களை எப்போது நிறுத்தப் போகிறார்கள் என்பது தான் கேள்வி. சரி, விஷயத்துக்கு வருவோம்.

அஜித் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1993ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் அஜித். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் யார் இந்த அழகான இளைஞன் என கவனிக்கப்பட்டார்.

அதற்கடுத்து சில தோல்விகளுக்குப் பிறகு ஆசை படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்தார். அதற்கடுத்து காதல் கோட்டை படம் அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. மீண்டும் சில தோல்விப் படங்களால் தடுமாறினாலும் இடையிடையே வந்த சில படங்கள் அவரைக் காப்பாற்றி வந்தன.

1999ம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி படத்தில் அவரது இரு வேட நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுமுகம்தான்.

தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் அவரால் அசத்த முடியும் என நிரூபித்தார். தொடர்ந்து சில தோல்விகள், சில வெற்றிகள் என்றுதான் அவருடைய திரைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அவருடைய இமேஜும், அவருக்கான வரவேற்பும் குறையவில்லை என்பதுதான் உண்மை.

சில படங்கள் தோல்விப் படங்களாக இருந்தாலும் பெரிய ஓபனிங் கொடுத்த படங்களாக இருந்தது என்பதுதான் கமர்ஷியல் உண்மை. கடந்த சில வருடங்களில் வெளிவந்த வேதாளம், விஸ்வாசம் அவரை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளன.

கடந்த வருடம் அஜித் படம் எதுவும் வெளியாகாத வருத்ததில் இருக்கும் ரசிகர்கள் அவர் தற்போது நடித்து வரும் வலிமை படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வலிமை அப்டேட் என்பதை எங்கெங்கோ ஒலிக்க வைத்தார்கள்.

சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகத்தில் நுழைந்து பல போராட்டங்களுக்குப் பிறகு உயர்ந்து, ரசிகர் மன்றங்களே இல்லாமல் இந்த அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டுமே என்பதை அவரது போட்டியாளர்களே பாராட்டிச் சொல்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here