தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வேலன் சுவாமிகள்!

0

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மே 18 இன்றைய நாள் இந்த நினைவேந்தல் நிகழ்வு இறுதிப் போர் உச்சம் பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியின் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் முழு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு இராணுவம் ,பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பின் கண்களில் அகப்படாது இந்த நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றுள்ளது.

வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இனப்படுகொலையின் நினைவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்கத்தால் ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்துக்கு அமைவாக முதலாவது ஆலமர கன்று ஒன்றும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகளால் நடுகை செய்யப்பட்டுள்ளது .

கொவிட்19 சுகாதார விதிகளை மீறாமல் நினைவேந்தலை மேற்கொள்ள தடை இல்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று ஏற்கனவே விதித்த தடை உத்தரவை திருத்திய கட்டளை ஆக்கி தீர்ப்பு வழங்கிய நிலையில் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் பிரதேசம் உள்ளடங்கும் பொலிஸ் பிரிவு உட்பட ஏனைய இரண்டு பொலிஸ் பிரிவுகள் சேர்த்து முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here