டி20 உலகக்கோப்பை! இந்திய அணி அறிவிப்பு – மீண்டும் வரும் தோனி

0
SYDNEY, AUSTRALIA - NOVEMBER 29: Virat Kohli and his Indian team mates walk off the field during game two of the One Day International series between Australia and India at Sydney Cricket Ground on November 29, 2020 in Sydney, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

ஐக்கிய அரசு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் இந்திய ஒருநாள், டி20 அணியில் இடம் பெறாத ரவிச்சந்திர அஸ்வினுக்கு உலகக் கோப்பைக்கானஅணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சஹல், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக வலம் வந்தாலும் வெற்றிகரமான கேப்டனாக இன்னும் உருவாகவில்லை. இதுவரை ஐசிசி சார்பில் ஒரு கோப்பையைக் கூட கோலி தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை.

ஐசிசியின் கோப்பைகளை வெல்ல முடியாததன் காரணமாகவே இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கோலியால் உருவாகமுடியில்லை, இடம் பெறவில்லை. முக்கியமான தருணத்தில் மிகப்பெரிய வெற்றிகளை எவ்வாறு பெறுவது என்பது கோலிக்கு சிக்கல் நிறைந்ததாக இருந்து வந்தது. அந்த பிரச்சினையைத் தீர்க்கவே அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் அணிக்குப் பெற்றுக் கொடுத்த பெருமை தோனிக்கு இருக்கிறது. மிகப்பெரிய வெற்றிகளை எவ்வாறு பெறுவது, இக்கட்டான தருணத்தில் என்ன முடிவுகளை எடுப்பது தோனிக்கு கைவந்த கலை ஆதலால், தோனியை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்ட தருணமே, இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தோனி, சச்சின் கைகளில் வழங்கியதுபோன்று கோலியும், தோனியிடம் வழங்குவார் என்று சமூகஊடகங்களில் வர்ணிக்கப்படுகிறது.

பயிறச்சியாளர் ரவி சாஸ்திரியின் பணிக்காலம் இன்னும் 6 வாரங்களில் முடிய இருக்கும் நிலையில் தோனியின் வருகையும், ஆலோசனையும் அணிக்கு நிச்சயம் பலன் அளிக்கும். ரிஷப் பந்த், இஷான் கிஷன் இருவருக்கும் தோனி வழிகாட்டி என்பதால், தோனியின் வருகை ரிஷப் பந்த், இஷான் கிஷன் இருவரின் பேட்டிங்கையும் மேலும் வலுவடையச் செய்யும்.

தோனியை ஆலோசகராக அணியில் நியமிக்க பிசிசிஐ சார்பில் ஆலோசனை கேட்கப்பட்டபோது கேப்டன் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அணி வீரர்கள் அனைவரும் ஒருமித்து ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த அணித் தேர்வில் முக்கியமானது ரவிச்சந்திரஅஸ்வின் சேர்க்கப்பட்டதாகும். கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினை எடுக்காமல் கோலி ஓரம்கட்டி வைத்தது பெரிய சர்ச்சையாக மாறியது.

அஸ்வினுக்கு ஏன்வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கு தர்க்கரீதியாக எந்த காரணத்தையும் கோலியால் கூற முடியவில்லை. ப்ளேயின் லெவனில் அஸ்வின் இடம் பெறுவதற்கு கேப்டன்தான் எதிராக இருக்கிறார், பயிற்சியாளர் பிரிவில் யாரும் எதிராக இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அஸ்வின் அணியில் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட்டையும் மீறிய காரணங்கள் இருக்கின்றன என சுனில் கவாஸ்கரே மறைமுகமாக குறிப்பிட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட அஸ்வின் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பெற்றார். அவர் மீண்டும் அணிக்குள் வந்தது மிகப்பெரிய பலமாகும்

அணியில் அனுபவம் மிக்க வீரர், எந்தஆடுகளத்திலும் ஆப்-ஸ்பின் சிறப்பாக வீசக்கூடிய பந்துவீச்சாளர் என்றால் உலகளவில் தற்போது அஸ்வினைக் குறிப்பிடலாம் அவரின் வருகை நிச்சயம் அணிக்குள் ஊக்கத்தை அளிக்கும். முக்கியமான தருணத்தில் விக்கெட் வீழ்த்தவும் அஸ்வின் தேவைப்படுவார்.

அதேநேரம், யஜுவேந்திர சஹல், ஷிகர் தவண், பிரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காயம் காரணமாக கடந்த மார்ச் மாத்ததிலிருந்து எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத ஸ்ரேயாஸ் அய்யர் காத்திருப்பு வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் இருவரும் காத்திருப்பு வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ராகுல், இஷன் கிஷன் என 3 தொடக்க ஆட்டக்காரர்களும் இவர்கள் 3 பேரும் நடுவரிசையிலும் விளையாடக் கூடிய திறமைபடைத்தவர்கள். இதில் இஷன் கிஷன், ராகுல் இருவரும் கூடுதல் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர்.

இந்திய அணியில் அஸ்வின், ராகுல் சஹர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல் என 5 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என 3 வேகப்பந்துவீச்சாளர்களும், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என இரு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்

இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்) ரோஹித் சர்மா(துணைக்கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

காத்திருப்பு வீரர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here