டக்ளஸ் தேவானந்தாவை ஒருபோதும் சந்திக்கமாட்டோம்! அமைச்சரின் தகவலுக்கு பதிலடி

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுதொடர்பில் தன்னுடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என, தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே, எங்கள் உறவுகளில் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனர், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் காலத்திலும், காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு அரசாங்கமோ, அவ்வரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

மாறாக, எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணமாகும். இந்தநிலையில் தாய்மார்களை நீதிமன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும், அமைச்சரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது. இந்த நிலையில், இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகவுள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை.

எனவே, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு நாம் தயாரில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here