ஜெயகாந்தனின் திடீர் மறைவு பேரிழப்பு – சிறீதரன்

0

காந்தன் எப்போதும் என் இதயத்தில் இடம்பிடித்திருந்த தனிப்பெரும் ஆளுமையாளன், ஏன் சாதனையாளன் என்று கூடச் சொல்லலாம்.

தமிழின விடுதலைப் போராட்டத்தை இதயசுத்தியோடு நேசித்த அவன், சக்கரநாற்காலியில் இருந்தபோதும் தன் சிந்தனை, சொல், செயல், ஆளுமை என அனைத்திலும் அடுத்தவர்களைவிட எப்போதும் ஒரு படி உயர்ந்தே தெரிவான் என பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயகாந்தனின் மறைவையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழினத் தலைவரையும் தன் இதய ஆழத்தில் இருத்தி நேசித்ததன் விளைவாக தன்னையும் அவ் விடுதலை இயக்கத்தில் ஒருவனாக இணைத்துக்களமாடி, விழுப்புண் தாங்கி, தன் வாழ்வின் மிகுதியை சக்கர நாற்காலியுடன் கடக்கும் துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகிய காந்தன் இறுதிப்போரின் பின் புனர்வாழ்வுபெற்று விடுதலையாகிய பின்னரும் ஓய்ந்துவிடாது, தன் தனித்த முயற்சியால் கற்றுத்தேர்ந்து, சமூக அந்தஸ்துள்ள அரச பணியில் தன்னையும் ஓர் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக இணைத்துக் கொண்டதன் மூலம், தான் உறுதியான தலைவனின் உன்னத வழிகாட்டலில் வளர்ந்தவன் என்பதை இன்னொருமுறை நிரூபித்திருந்தான்.

காந்தன் எப்போதும் வாழ்வின் அடுத்தகட்டம் பற்றிய ஆவலோடிருப்பதை அவனை அறிந்தவர்கள் நன்கறிவர்.

அதன் வெளிப்பாடாய் கடந்த ஓரிரு மாதங்களின் முன், தன் முள்ளந்தண்டு வடத்திலிருந்த குண்டுத்துகள்களை மீட்கும் முயற்சியில் முதற்கட்ட வெற்றி கண்டதைப் போலவே, சக்கரநாற்காலியிலிருந்தும் மெல்ல மெல்ல மீண்டு விடலாம் என்ற முழுமையான நம்பிக்கையிலிருந்தான்.

ஆனால் அவனது திடீர் மறைவுக்கு அந்தக் குண்டுத்துகள்களை மீட்டதும் ஒரு காரணமோ என்று எண்ணும் நிலை இன்று எமக்கு ஏற்பட்டிருக்கிறது.

தன் எதிர்காலம் குறித்த முழுமையான கனவுகளோடு பயணப்பட்ட ஒரு இளைய புதல்வனை இயற்கை தன்வசம் எடுத்திருப்பதை அன்பின்பாற்பட்ட எம் இதயங்கள் ஏற்க மறுக்கின்றன.

தான் பிறந்து, வளர்ந்த பூநகரி மண்ணையும், மக்களையும் தன் உயிரினும் மேலாக நேசித்து இறுதிவரை அந்த மக்களின் நலனுக்கான அத்தனை கருமங்களையும் முழுமூச்சாய் ஆற்றிமுடித்திருக்கிறான்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியில் விருப்புக்கொண்ட உண்மையான தொண்டனாக அவன் ஆற்றிய கட்சிப்பணிகளும் அளப்பரியவை.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சிமன்றத் தேர்தலின் போது பூநகரி பிரதேச சபையின் உறுப்பினராக மக்கள் ஆணை பெற்ற காந்தன் அந்தப் பதவிக்குரிய பணிகளை செவ்வனே செய்து முடித்த சமநேரத்தில் தன் இயலுமையின் எல்லைகளை எல்லாம் கடந்து நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான நலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் மிகச்சிறந்த சமூகப் போராளியாகவே வாழ்ந்திருந்தான்.

அதற்கு, கோவிட் பெருந்தொற்று பேரிடர் காலத்தில் அவன் ஆற்றிய சேவைகளே அளவுகோல். அவனது சிந்தனையின் கூர்மையைப் போலவே குரலின் கம்பீரத்தையும், தலைமைப் பண்பையும் கண்டு பல சந்தர்ப்பங்களில் நான் பூரித்திருக்கிறேன்.

கட்சியின் எந்த நிகழ்வாயினும், மக்களின் எந்தத் துயராயினும் அதைத் தன் தோள்மேல் தானாய் ஏற்பதற்கு என்றுமே தயாராயிருந்த என் மனதிற்கு மிக நெருங்கிய தம்பி காந்தனின் இழப்பு இத்தனை அகாலத்தில் நிகழும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

காந்தனின் மக்கள் பணியும், ஆளுமையும், கட்சி மீதான அவனது கொள்கைப் பற்றுறுதியும் எமது கட்சியின் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய திட்டமிடல்களில் எல்லாம் “விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்” என்ற தனிமனித நலன்கருதா மக்கள் பிரதிநிதியையும் உள்ளடக்குவதற்கு வழிகோலியிருந்தது.

ஆனால் எம்முடைய அந்த எதிர்பார்ப்புக்களையெல்லாம் தகர்க்கும் வகையில் எதிர்பாராதவிதமாக நேர்ந்த காந்தனின் திடீர் மறைவு இதயத்தை ரணமாக்கும் ஆழ்ந்த துக்கிப்பை எமக்கு அளித்துள்ளது.

காந்தனின் இழப்பு அவனது குடும்பத்தினருக்கு மட்டும் நேர்ந்த இழப்பல்ல, ஏனென்றால் தனது இருப்புக்காக எல்லாவழிகளிலும் போராடும் சமூகமொன்றின் உணர்வுகளோடு ஒன்றிக்கலந்த ஒரு உயரிய மனிதனின் இழப்பு அந்த சமூகத்திற்கே பேரிழப்பு.

இது எமது கட்சி மட்டத்திலும் என்றுமே இட்டு நிரப்ப முடியா பெரு வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மை.

என் மனதின் வலிகளை எல்லாம் கடந்து, தான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற மன உணர்வை அடியோடு புறந்தள்ளி எல்லோருக்கும் வழிகாட்டியாய் வாழும் காலமெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து, மறைந்த என் அன்புத்தம்பி காந்தனின் ஆத்மா அமைதி பெறவும், இந்தப் பேரிழப்பால் பெரிதும் கலங்கிநிற்கும் காந்தனின் அம்மா, சகோதரர்கள், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவனது இழப்பைத் ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை இறைஞ்சுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here