இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை நடக்கவுள்ள நிலையில் அதன்போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இதன்படி பாகிஸ்தானின் உதவியுடன் வாக்களிப்பில் கலந்துகொள்ளும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதியும், பிரதமரும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கையிலுள்ள தூதுவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன், பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் தொலைபேசி மூலம் பேசி வருவதாக கூறப்படுகின்றது.
வாக்களிப்பின் போது தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க எதிர்பார்த்துள்ள நாடுகளை நடுநிலையாக வாக்களிக்க செய்யும் வகையிலான முயற்சிலேயே இவர்கள் ஈடுபட்டுள்ளன.
மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் 47 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவே எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தது 24 வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன்படி 24 வாக்குகளை எடுக்க விடாது சில நாடுகளை நடுநிலையாக வாக்களிக்க செய்யவும், மேலும் சில நாடுகளை தமக்கு ஆதரவாக வாக்களிக்க செய்யவும் தீவிர முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இப்போதைக்கு அரசாங்கத்திற்கு 10 ற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.