ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இழந்தால் பொருளாதாரம் பாதாளத்தில் விழும்: ரணில் எச்சரிக்கை

0

அரசியலை புறந்தள்ளி இலங்கை அரசாங்கமானது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி ஐ மீண்டும் பெற எங்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்த வசதி இலங்கைக்கு வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்களில் மேம்பட வழிவகுத்தது என்றார்.

ஜி.எஸ்.பி வரி சலுகை தொடர்பாக இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகை ரத்து செய்யப்படும் என்று எங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோயால் இந்த நேரத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கியதால் எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, எங்கள் அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது.

தற்போது எமக்கு ஆடைதொழில்துறை மற்றும் தேயிலை தொழிற்துறை மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நீக்கப்படுமாயின் அந்நிய செலாவணி குறைவடையும். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரிக்கக் கூடும். வேலை வாய்ப்புக்கள் அற்றுப் போகும்.

எழுந்துள்ள ஆபத்தை எதிர்கொண்டு ஜி.எஸ்.பி அரசியல் மயமாக்கப்படக்கூடாது, சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சுமக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் எடையைச் சேர்க்க வேண்டாம். நாட்டை அழிக்க வேண்டாம் என்று நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here