சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்ய நவீன தொழில்நுட்ப உதவிகள் தேவையென்கிறார் ஜனாதிபதி..!

0

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் தற்போது சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

மேலும் சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இதன்போது உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார். 2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டிற்கு அவசியமான சக்திவலு உள்ளீர்ப்பில் 80 சதவீதமானவற்றை புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் மூலம் பெற்றக்கொள்வதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்திற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளைப் பரிமாற்றுவதற்கும் சூரியசக்தியை சேமிப்பதற்கும் அதனைப் பிறிதொரு பகுதிக்கு பகிர்வதற்குமான உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் சாரா ஹல்டன் உறுதியளித்தார்.

தற்போது 20.8 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 30 சதவீதமாக விரிவுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவுத்திறன் மற்றும் பொறிமுறை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இதன்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் தற்போது சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்வதில் பிரித்தானிய தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார். அத்தோடு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, காணி விவகாரம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here