சுவிட்ஸர்லாந்தில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

0

சுவிட்ஸர்லாந்தில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொவிட் தொற்றிற்கு தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், தொற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்களும், நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்களும்மட்டுமே பொது வாழ்விடங்களில் நுழையலாம்.

16 வயதிற்கு உட்பட்டோருக்கு இச்சான்றிதழ் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தங்குவிடுதிகளின் உள்ளரங்குகளில், மதுநிலையங்கள் மற்றும் உணவகங்கள், அதுபோல் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிலையங்கள், நாடக அரங்கு, திரையரங்கு, சூதாட்ட விடுதிகள், நீச்சல்நிலையங்கள், அருங்காட்சியங்கள், விலங்குகாட்சிசாலை, இதுபோன்றவற்றிக்கும் தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படுகின்றது.

உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளும் (இசைக்கச்சேரி, விளையாட்டு நிகழ்வு, மன்ற நிகழ்வுகள், பொது இடத்தில் நடைபெறும் தனியார் திருமண விழாக்கள், என்பனவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் எதிர்காலத்தில் கட்டாயமாகும்.

பொதுப்போக்குவரத்து, வணிகநிலையங்கள், மற்றும் வானூர்திநிலையங்களில் புடைபெயர்வு (ரிறன்சிற்) பகுதிகளுக்கும் தனியார் இடங்களில் 30 ஆட்களுக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்வுகளுக்கும் தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கப்படுகின்றது.

அதுபோல் சமயவழிபாடு மற்றும் அரசியல் கருத்தினை வெளிப்படுத்தும் அரசியல் பேரணிகளுக்கும் 50 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை. பாராளுமன்றக் கூட்டங்களுக்கும், ஊராட்சி மன்றக்கூட்டங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.

தனிநபர்கள் அரசசெயலகங்களில் பயனாளிகளாக செல்லும்போதும், அதுபோல் தனி ஆட்கள் நாளாந்த செயற்பாடுகளில், எடுத்துக்காட்டாக முடிதிருத்த நிலையம், மருத்துவ தேவை, மதியுரை வேண்டுகை, சமூக நிலையங்களில் விருந்தோம்பல் பணிகளுக்கு தடுப்பூசிச் சான்று தேவையில்லை.

உள்ளரங்குகளில் நடைபெறும் உடற்பயிற்சி அல்லது இசை நாடக ஒத்திகைகளில் ஒரு இடத்தில் ஆகக்கூடியது 30 ஆட்களுக்கு உட்பட்டு இருப்பின் தடுப்பூசி சான்று தேவையில்லை.

அதுபோல் பல அறைகள் போதிய இடைவெளியுடன் இருப்பின் ஒரு அறைக்குள் 30 ஆட்கள் எனப் பிரிக்க வாய்ப்பு இருப்பின் அவர்கள் தடுப்பூசிச்சான்றிதழ் முறையைக் கடைப்பிடிக்க தேவையில்லை.

தடுப்பூசி இடாதோர் பொதுநிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாது, அவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தால் மட்டுமே பொது வாழ்விடங்களுக்கு செல்லலாம்.

அவ்வாறு பரிசோதனை செய்வதற்கு இதுவரை சுவிஸ் அரசு கட்டணத்தை ஏற்றுவந்தது. ஆனால் 01.10.21 முதல்இக்கட்டணங்களை பரிசோதனை செய்பவரே முழுமையாக செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பாதாக மருத்துவமனையோ – மருத்துவரோ ஐயம்கொண்டு எவருக்காவது பரிசோதனை செய்தால் அதற்கான செலவை சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும், ஆனால் அவர்களுக்கு தொற்றுப்பரிசோதனை செய்தமைக்கு சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று விரைவுப்பரிசோதனை தொடர்ந்து கட்டணமற்று வழங்கப்படும், கட்டணத்தினை சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here