சீரற்ற காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு!

0

சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளார்கள். 18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 960 சொத்துக்கள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 23 ஆயிரத்து 618 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புத்தளம், முந்தல், மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பி வருகின்றது.

கொழும்பு, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு ஒன்றின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளது. புத்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

கேகாலை, அறநாயக்க, அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இறம்புக்கனை, மாவனல்லை வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும், குருநாகல் புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வெளிநாட்டவர்களைச் சேர்ந்த பஸ் வண்டி ஒன்று பாலாவி பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் பிளக்புல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவால் தடைப்பட்ட போக்குவரத்து தற்சமயம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

மஹஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கேகாலை, இறம்புக்கணை, புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டமையால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

கம்பஹா, பியகம, யட்டவத்த கிராம செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

களுத்துறை மாவட்டத்தின் குடாகங்கை, புளத்சிங்கல, தொடங்கொட உட்பட களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

கேகாலை, கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் களனிகங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க, தோம்பெ, பியகம, கொலன்னாவை, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களிலும் வெள்ளம் ஏற்படலாம்.

கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹஓயாவை அண்டிய கிரியுல்ல, அளவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் வழங்கும் எச்சரிக்கை அறிவித்தல்கள் பற்றி என்றும் கரிசனையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here